வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று (டிசம்பர் 30) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்நிலையில், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த நரேந்திர சிங் தோமர், "நல்ல சூழ்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிவடைந்துள்ளது. நான்கு விவகாரங்களில் இரண்டில் சமரசம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் குளிர்காலத்தை கருதி முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பும்படி விவசாய சங்க தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன்.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும். சுற்றுச்சூழல் தொடர்பான சட்ட திருத்தமே முதல் பிரச்னையாக இருந்தது. அது தொடர்பாக விவசாயிகள் தங்களின் குறைகளை தெரிவித்தனர். எனவே, விவசாயிகளுக்கு அதில் விலக்கு அளித்துள்ளோம். மின்சார சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொண்டால் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். நீர்பாசனத்தை தொடரும் வகையில் மின்சார மானியத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்த விவகாரத்திலும் ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளது.
நல்ல சூழலில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. ஆனால், புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்த சட்டங்களை நீக்க கோரி விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என அரசு தொடர்ந்து தெரிவித்துவருகிறது. இதனை எழுத்துப்பூர்வமாக வழங்க தயாராக உள்ளோம். ஆனால், அதனை சட்டமாக இயற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட வடிவம் கொடுப்பது குறித்தும் மற்ற விவகாரங்கள் குறித்தும் ஜனவரி 4ஆம் தேதி ஆலோசிக்கப்படும்" என்றார்.