லக்னோ (உத்தரப் பிரதேசம்) 2020ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி, கரோனா ஊரடங்கு காரணமாக தாஜ்மஹால் மூடப்பட்டது. தொடர்ந்து, கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால், சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தது.
தற்போது, கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, முன்னதாகஜூன் 16 ஆம் தேதி தாஜ்மஹால் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இருப்பினும், இரவு நேரத்தில் தாஜ்மஹாலை பார்வையிட தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி
காதலர்களின் சின்னமான தாஜ்மஹாலை இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் கண்டு ரசித்திட மக்களுக்கு அதீத ஆர்வம் உண்டு. அவர்களின் பல நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தாஜ்மஹாலை இரவு நேரத்தில் காண வாரத்தில் மூன்று நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹால்
இந்நிலையில், தாஜ்மஹாலை பார்வையிட வந்த பொது மக்கள் கூறுகையில், " ஓராண்டுக்குப் பிறகு தாஜ்மஹால் இரவு நேர கண்டுகளிக்க வழி செய்யப்பட்டுள்ளது. நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இது மிகவும் அருமையான தருணம்.
ஆனால், மழை பெய்து கொண்டிருந்ததால், நிலாவின் வெளிச்சம் பிரகாசமாக இல்லை. நிலா வெளிச்சமாக இருக்கும் பட்சத்தில் தாஜ்மஹால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருந்திருக்கும்” என்றனர்.
50 பேர் மட்டுமே அனுமதி
இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ண்கர் கூறுகையில், "தாஜ்மஹாலை இரவு நேரத்தில் பார்வையிட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்களுக்கு நல்ல செய்தி.
கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறோம்.
பார்வையாளர்கள் மாஸ்க் அணிவதும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும். இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை மூன்று ஸ்லாட்களில் பார்வையிட அனுமதிக்கிறோம்.
ஒரு ஸ்லாட்டில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தாஜ்மஹாலை வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இரவு நேரத்தில் காணமுடியும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு #ETV Bharat News Today