டெல்லி : திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், கடந்த 2013 - 2014 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, 2015 ஆம் ஆண்டு அவர் தரப்பில் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டது. அவர் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்து இருக்க வேண்டிய நிலையில், 2015ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி விடுபட்ட நிதி ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
அபராதம் உள்ளிட்ட தொகைகளுடன் சேர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் 1 கோடியே 4 லட்ச ரூபாயை வருமான வரியாக செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உரிய காலத்துக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு கடந்த 2016 ஆம் ஆண்டு, கதிர் ஆனந்துக்கு வருமான வரித்துறை சார்பில் மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதற்கு, கதிர் ஆனந்த் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் கதிர் ஆனந்த் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கீழமை நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். வருமான வரித்துறை வழக்கில் ஆஜராகுமாறு கதிர் ஆனந்த்துக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், வேலூர் நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில், வருமானவரி விவகாரத்தில் தன் மீது வருமான வரித்துறை கிரிமினல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி கதிர் ஆனந்த் எம்.பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கதிர் ஆனந்த் எம்.பி. மீதான வருமானத் துறையின் கிரிமினல் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷ்கேஷ் ராய், பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. கதிர் ஆனந்த் எம்.பி, தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கணேஷ் மற்றும் வில்சன், நீட்டிக்கப்பட்ட கால வரையறைக்குள் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதாகவும், வரி பாக்கி, அபராதம் மற்றும் அதற்கான வட்டி முன்கூட்டியே செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : அதானி முறைகேடு விசாரணை - உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்கும் செபி!