டெல்லி : ஜம்மு காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை முன்னுரிமை அளித்து விசாரிக்குமாறு டெல்லி அரசு கோரியதை நிராகரித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370வது சிறப்பு சட்டப்பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஜூலை 11ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மத்திய அரசு தரப்பில் ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எதிர் தர்ப்பு மனுக்களை ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
இதனிடையே மத்திய அரசு கொண்டு வந்த டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, ஆகஸ்ட் 2ஆம் தேதி, 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு பதிலாக அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட டெல்லி அரசின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அவசர சட்ட மனுவை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி, அவசர சட்டத்தால் டெல்லி அரசின் முழு அமைப்பும் முடங்கிக் கிடப்பதாகவும், அரசியலமைப்பு அமர்வில் முடிவு எடுக்க வெகுநேரம் எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் கூறினார்.
இது குறித்து பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், முன்னரே திட்டமிடப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்க முடியாது என்றும், அது தொடர்பாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், மனுதாரர்கள் விசாரணைக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்ற உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி!