டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சேது சமுத்திரத் திட்டத்தால், ராமர் பாலம் சிதைந்து போகும் எனக் கூறி திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
வழக்கில் ராமர் பாலத்திற்கு எவ்வித சேதமும் இன்றி சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு விளக்கமளித்தது.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சுப்பிரமணியன்சுவாமி, ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவித்தால் சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்தடுத்து மனு குறித்த விசாரணையின் போது மத்திய அரசு அறிக்கை அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
கடந்த முறை விசாரணையின்போது சுப்பிரமணியன் சுவாமி தரப்பில், மனு குறித்து பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், இதுவரை மத்திய அரசு தரப்பில் பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு தரப்பில், வழக்குத் தொடர்பாக பதில் மனு தயாராகி விட்டதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து மத்திய அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜன.12) விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது சுப்பிரமணியன்சுவாமி தரப்பில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த ஒரு முடிவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மனு தொடர்பாக ஏன் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும், வழக்கை பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுப்பிரமணியன்சுவாமி, ஏற்கெனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டதாக சொல்லி இருந்த நிலையில் தற்போது அதை மாற்றி கூறுவதாக தெரிவித்தார். இது அமைச்சரவை தொடர்பான விவகாரம் என்பதால் அமைச்சரவை செயலாளருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் கூறினார்.
இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனு தொடர்பாக பிப்ரவரி முதல் வாரத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2-வது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பெங்களூருவில் சாலையின் நடுவே திடீர் பள்ளம் - வாகன ஓட்டி காயம்!