டெல்லி: ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் குமார் ஜெயின், பணமோசடி வழக்குத் தொடர்பாக, கடந்த 2022ஆம் ஆண்டு, மே 30ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவரது ஜாமீன் மீதான மனு, இன்று (ஜூலை 10ஆம் தேதி) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணை, ஜூலை 24ம் தேதி விசாரணைக்கு வருவதாக அறிவித்து உள்ளது.
சத்யேந்தர் ஜெயின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், சத்யேந்தர் ஜெயினுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும், இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி வாதிட்டார்.
அமலாக்க இயக்குநரகம் (ED) சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, மாஜி அமைச்சர் ஜெயின், தனது உடல்நிலையை சுயாதீனமாக மதிப்பீடு செய்ய AIIMSக்கு சமர்ப்பிக்கலாம் என்று நீதிபதிகள் அமர்வு முன்முறையிட்டு இருந்தார். அவரது உடல்நிலையை ஏற்கனவே மூன்று மருத்துவமனைகள் மதிப்பீடு செய்துள்ளதாக ஜெயின் தரப்பு வழக்கறிஞர் வாதிட்ட நிலையில், மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, சத்யேந்தர் ஜெயினின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய அமலாக்க இயக்குநரகத்தை அனுமதிக்கும் வகையில் விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கழிவறையில் சரிந்து விழுந்த அவரது உடல்நிலை, நாளடைவில் மோசமடைந்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம், கடந்த மே மாதம் 26ஆம் தேதி, இடைக்கால ஜாமீன் வழங்கியது.
பணமோசடி வழக்குத் தொடர்பாக, சத்யேந்தர் ஜெயின், மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து இருந்த நிலையில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு மே 30ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர்மீது, ஊழல் தடுப்புச் சட்டம், 2017இன் விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வட இந்தியாவை புரட்டி எடுக்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு, 14 பேர் உயிரிழப்பு!