டெல்லி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுவை ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் பெலே எம் திரிவேதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட மாட்டார் என உறுதியளித்தது.
முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜரான போது, உச்ச நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவின் கைது செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்ததோடு, அதனைக் கண்டித்து நோட்டீஸ் வெளியிட்டு, எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்குமாறு ஆந்திர மாநில காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் ஃபைபர்நெட் ஊழல் வழக்கு தொடர்பாக, சந்திரபாபு நாயுடு அக்டோபர் 16ஆம் தேதி ஆஜர்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா. மேலும் திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சிக்கியதை அடுத்துத் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டு சுமத்துவதாக வாதாடினார்.
அதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, சந்திரபாபு நாயுடு அக்டோபர் 18ஆம் தேதி வரை கைது செய்யப்பட மாட்டார் என உறுதியளித்தார். பின்னர் நேரமின்மை காரணமாக விசாரணை அக்டோபர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் ஃபைபர் நெட் ஊழல் வழக்கு மற்றும் திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளின் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒரே சமயத்தில் விசாரித்துவருகிறது. முன்னதாக ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர், ஃபைபர் நெட் ஒப்பந்தத்தை, தகுதியே இல்லாத ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், ஃபைபர்நெட் மோசடி வழக்கில், முன்ஜாமீன் கோரி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.