தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா இன்று (நவ. 15) காலை உயிரிழந்தார். 80 வயதாகும் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டார். ஐதராபாத் கச்சிபௌலியில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் கிருஷ்ணா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது ரசிகர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சில நாட்களாக உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருந்த கிருஷ்ணாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 13) நள்ளிரவு 2 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு லேசான மாரடைப்பும் ஏற்பட்டது. மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா கிருஷ்ணாவை கச்சிபௌலியில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிபிஆர் செய்தனர். அதன்பிறகு, கிருஷ்ணா ஐசியுவுக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின், மருத்துவர்கள் கிருஷ்ணாவின் உடல்நிலை அறிக்கையை வெளியிட்டனர். இன்னும் இரண்டு நாட்கள் வரை எதுவும் கூற முடியாது என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.
இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கவலை அடைந்தனர். அவர் குணமடைய பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா உயிரிழந்தார்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மூத்த மகன் ரமேஷ் பாபு இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மனைவி இந்திராதேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இப்போது சூப்பர் ஸ்டார் கிருஷ்ணனும் உயிரிழந்ததால் தெலுங்கு ரசிகர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: வகுப்பறையில் காவி வண்ணம்: கர்நாடக முதலமைச்சர் ஆதரவு