டெல்லி: பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்தது, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் அவரது மனைவி லீனா மரியாவும் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில், சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக பரபரப்புத்தகவலைத்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லி ஆளுநர் சக்சேனாவுக்கு தன் வழக்கறிஞர் மூலம் சுகேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஆம்ஆத்மி கட்சி தனக்கு உயர் பதவி அளித்து, மாநிலங்களவைக்கு அனுப்புவதாக உறுதியளித்ததாகவும், அதற்காக அக்கட்சிக்கு தான் 50 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
திகார் சிறையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், அதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சர் சத்யேந்திர ஜெயினும், பணமோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சுகேஷ் சந்திரசேகரின் இந்த குற்றச்சாட்டை ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: மோடி விசிட்டிற்காக புதுப்பிக்கப்படும் மோர்பி அரசு மருத்துவமனை