இந்தியா-சீனா எல்லை பிரச்னை தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கவில்லை. வரும் 2024 ஆம் ஆண்டு மீண்டும் பாஜக அரசு அமையும்.
ஆனால், முக்கிய தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, அத்வானி உள்ளிட்டோரை கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதால், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையிடம் கேட்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியைப் பார்க்கலாம்.
கேள்வி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து உங்களின் கருத்து
பதில்: காஷ்மீர், நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும். புனித இடங்கள் பல உள்ளன. ஜம்முவில், இன்னும் இந்து மக்கள் பெரும்பான்மையாகவும், லடாக்கில் புத்த மக்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர்.
அரசியலமைப்பில் 370ஆவது பிரிவு கொண்டுவரப்பட்டபோது, அதற்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. சிறப்பு அந்தஸ்து சில காலம் என்று அப்போதே சர்தார் படேல் கூறியிருந்தார்.
அரசியலமைப்பில் கூட இது தற்காலிகமானது என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
கேள்வி: காங்கிரஸ் மீண்டும் பழைய காஷ்மீரைக் கோருகிறது
பதில்: காங்கிரஸ் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளது. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
கேள்வி: சீனா தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா?
பதில்: நான் முற்றிலும் அதிருப்தி அடைகிறேன். சீனா நமது எல்லைக்குள் ஊடுருவிய அந்த நேரத்தில், தக்கப் பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் கடினம்.
கேள்வி: அரசாங்கம் தாமதமாக செயல்பட்டதா?
பதில்: அரசாங்கம் சீனாவுடன் சமாதானத்திற்கு சென்றது. ஆனால் அவர்களுடன் போருக்குச் சென்றிருக்க வேண்டும். எங்களை சிறியதாக காட்ட நினைத்தார்கள், அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
கேள்வி: கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தவறிவிட்டதா?
பதில்: கரோனா அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏழைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் அலையில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
இரண்டாவது, மூன்றாவது அலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் இப்போது பாதிப்பைச் சந்திக்கிறோம்.
கேள்வி: தடுப்பூசி பற்றாக்குறை உள்ள போது, அதை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பதில்: இதுபற்றி நான் முன்பே பேசியிருக்க வேண்டும். பிப்ரவரியில் இது நடக்கும் போது, யாரும் பேசவில்லை. தடுப்பூசி உற்பத்திக்கு அரசாங்கம் பணம் ஒதுக்க வேண்டும்.
கேள்வி: வரும் 2022 இல் 5 மாநிலங்களுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுகின்றன. மூன்றாவது அணி உருவாகுமா; இது பாஜகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
பதில்: மோடி எடுக்க வேண்டிய மிக முக்கிய முடிவு 2024 இல் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தான். ஏனென்றால், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த பதவியையும் வகிக்கக்கூடாது என்று பாஜக கூறுகிறது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்தகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இப்போது மோடிக்கு 75 வயதாகிறது. அடுத்த முறை பிரதமர் வேட்பாளர் அவர் தான் என்றால் அது பற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும்.
கேள்வி: வரும் 2024 இல் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா? அல்லது காங்கிரஸ்? மூன்றாவது அணி உருவாகுமா?
பதில்: வரும் 2024க்குள் எதுவும் நடக்கலாம். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் சிறைக்குச் சென்றால் என்ன நடக்கும். இப்போது இது அவசியம் இல்லை.
கேள்வி: அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு நிலம் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாகப் பேசப்படுகிறது. அது பற்றி ?
பதில்: நான் அதில் கவனம் செலுத்தவில்லை. வேலை எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்கிறேன். அடிக்கல் நாட்டு விழாவில் கூட நான் கலந்து கொள்ளவில்லை.
எனக்கு அழைப்பும் வரவில்லை. கோயில் கட்டப்பட்ட பிறகு, நான் நிச்சயம் செல்வேன். காசிவிஸ்வநாதர் கோயில் இடித்து மசூதி கட்டப்பட்டது. இதற்கு மாற்றம் கொண்டு வந்து மீண்டும் கோயில் கட்டப்பட வேண்டும்.
அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டிக்கு நான் தலைமை ஏற்றுள்ளேன். முதலில் அயோத்தி, பின் காசி, அதன் பிறகு மதுரா.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நான் தமிழ் மொழியின் அபிமானி' - பிரதமர் மோடி