டெல்லி: 17ஆவது நாடாளுமன்றத்தின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு இன்று (ஆக.10) எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், "ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை, எதிர்காலத்தில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை ஒன்றிய அரசு ஆய்வு செய்து வருகிறது. நாட்டில் ஹைட்ரஜன் திட்டத்தை உருவாக்க, 2021 ஒன்றிய பட்ஜெட்டில், தேசிய ஹைட்ரஜன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடு தொடர்ந்து அதிகரிப்பு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான முதலீடு பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சி திட்டங்களுக்கான மொத்த செலவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
உலகளாவிய ஆராய்ச்சி
ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், உயிரி தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, சிஎஸ்ஐஆர், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் ஆகியவை எரிசக்தி, தண்ணீர், சுகாதாரம், வானியல் போன்ற முக்கிய துறைகளில் உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு: 127ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்!