டெல்லி: நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவையை கண்டித்து, கடந்த 5ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது டெல்லியில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கருப்பு நிற சட்டை அணிந்து பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று(ஆகஸ்ட் 10) ஹரியானா மாநிலம் பானிபட்டில் 2ஜி எத்தனால் ஆலையை காணொளி வாயிலாக திறந்து வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, காங்கிரசின் கருப்பு சட்டை போராட்டத்தை விமர்சித்தார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், பில்லி சூனியத்தை பரப்ப முயன்றார்கள் என்றும், கருப்பு நிற ஆடைகளை அணிவதன் மூலம் தங்களது அவநம்பிக்கை போக்க முடியும் என நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். மாந்திரீகம், பில்லி சூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கை கொண்ட செயல்களை செய்வதன் மூலம், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
பிரதமரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, "பிரதமருக்கு பணவீக்கம் தெரியவில்லையா? வேலையில்லா திண்டாட்டம் தெரியவில்லையா? உங்களது கருப்பு சுரண்டல்களை மறைக்க, பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளை பற்றி பேசி நாட்டை தவறாக வழிநடத்துவதை நிறுத்துங்கள். இதுபோல பேசி பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதை நிறுத்துங்கள். மக்களின் பிரச்சினைக்கு பதில் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கருப்பு ஆடை அணிபவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் கூறினார். ஈவேரா பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் கருப்புச் சட்டை அணிந்து, தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமரின் ‘பிளாக் மேஜிக்’ பேச்சு - காங்கிரஸ் பதிலடி!