பித்தோராகர்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் நேற்று (டிசம்பர் 4) நடந்த கல் வீச்சு காரணமாக பதற்றம் நிலவியது. இந்த சம்பவத்தின் போது நேபாள மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் உத்தரகாண்ட் மாநில தொழிலாளி காயமடைந்தார். இதுகுறித்து பித்தோராகர் போலீசார் கூறுகையில், இந்திய-நேபாள எல்லையில் உள்ள உத்தரகாண்ட்டின் தார்ச்சுலா அருகே காளி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுவருகிறது. இந்த அணை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் ஏற்படாமல் இருக்க கட்டப்பட்டுவருகிறது.
இதற்கு எல்லையில் நேபாள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீது நேபாள மக்களில் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொழிலாளி லால் சிங்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உடன் சம்பவயிடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தோம்.
இதுதொடர்பாக, வரும் புதன்கிழமை நேபாள அரசு அலுவலர்களுடன் பித்தோராகர் மாவட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் எனத் தெரிவித்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு நோபாள அரசு இந்தியாவின் காலா பானி, லிம்பியாத்யா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளை அதன் சொந்த பகுதியாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய வரைபடத்தை வெளியிட்டது. அப்போதிலிருந்து எல்லையில் இருக்கும் மக்களிடையே பனிப்போர் நிலவிவருகிறது.
இதையும் படிங்க: "பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது" - அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய காரணம்