மன்னார் (இலங்கை): எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக அக்டோபர் 16ஆம் தேதி 2 படகுடன் 15 இந்திய மீனவர்களும், அக்டோபர் 28ஆம் தேதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்களின் மூன்று படகுகளையும் அதிலிருந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்து மீண்டும் இந்திய அழைத்து வருவதற்குப் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இன்று (நவ.9) வியாழக்கிழமை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட 38 இந்திய மீனவர்கள் இலங்கையிலுள்ள மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது, இந்திய மீனவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து மன்னார் நீதிமன்றம் 38 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள 5 படகுகளின் உரிமையாளர்கள் மன்னார் நீதிமன்றத்தில் டிசம்பர் 13ஆம் தேதி ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை, இந்தியத் தூதரகம் மூலம் இந்தியாவில் உள்ள படகின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் இலங்கையிலுள்ள முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், விரைவில் 38 இந்திய மீனவர்களும் இந்திய திரும்புவதற்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முகாமிலுள்ள 38 மீனவர்களும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறையில் உள்ள 38 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு