திருவனந்தபுரம்: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்துக்கு எரிபொருள் கிடைக்காமல் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்கி உதவ, கேரளாவின் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் முன்வந்துள்ளன.
கொழும்பிற்கு அருகே உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மற்றும் கொச்சி விமான நிலையம், இலங்கை விமானங்கள் எரிபொருள் நிரப்ப உதவுகின்றன. இதுவரை இலங்கை விமான நிறுவனங்களின் 61 விமானங்களும், இலங்கைக்கு வந்த மற்ற சர்வதேச விமான நிறுவனங்களின் 29 விமானங்களும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பியுள்ளன.
கொழும்பு - பிராங்பேர்ட், கொழும்பு - பாரிஸ் மற்றும் கொழும்பு - மெல்போர்ன் விமானங்கள் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்புகின்றன. இது தவிர ஃபிளை துபாய், ஏர் அரேபியா, கல்ஃப் ஏர், ஓமன் ஏர் ஆகிய நிறுவனங்களின் விமானங்களும் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பி வருகின்றன.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இந்த விமானங்கள் தங்கள் பணியாளர்களை மாற்றுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அண்டை நாட்டிற்கு உதவும் வகையில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளதாக அதானி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இது வணிக நலன் இல்லை, அண்டை நாட்டிற்கு உதவுவது சமூக பொறுப்பு என்றும் தெரிவித்தனர்.
இதேபோல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொழும்பில் இருந்து 9 விமானங்கள் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி, 4 லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் எரிபொருள் நிரப்பியுள்ளன. தங்களது அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், அதிக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான வசதிகளை மேற்கொண்டுள்ளதாக கொச்சி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.