டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜன்பத் பகுதி எப்போதும் பொதுமக்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இங்கு நேற்று (மார்ச் 30) காலை பாதசாரி ஒருவர் சாலையைக் கடக்க முயன்ற போது, வேகமாக வந்த ஜீப் மோதியதில் படுகாயமடைந்தார். உடனடியாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், விபத்தை ஏற்படுத்தியவர் டெல்லி கரோல் பாக் பகுதியைச் சேர்ந்த அருண் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் அங்கு உள்ள ஹோட்டலில் தங்கி பணிபுரிந்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் 39 வயதான கிர்தாரி என்று தெரியவந்துள்ளது. மேலும், விபத்தின் போது அருண் மட்டும் காரில் பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்த சிவப்பு கலர் கார் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய அருண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கார் பார்க்கிங்கில் பிரச்னை - கவுன்சிலர் வெட்டிப் படுகொலை