லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான்(Azam Khan). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது மிலாக் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி குறித்தும் அப்போதைய உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் குறித்தும் விமர்சித்துப் பேசியிருந்தார். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ முடியாத சூழலை பிரதமர் மோடி உருவாக்கிக்கொண்டு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, அவர் பேசிய செய்திகள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்கள் வழியாக நாடு முழுவதும் தீயாக பரவியது. இந்நிலையில், மாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அசாம் கான் அவதூறு பேசி வருவதாகவும், இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது மட்டுமின்றி, பாஜகவினர் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: உத்தவ் தாக்ரே, சரத் பவாருடன் ஆலோசனை.. அரவிந்த் கெஜ்ரிவால் காய் நகர்த்தலின் பின்னணி என்ன?
இந்த வழக்கை ராம்பூர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் அசாம்கான் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் அசாம் கான் குற்றவாளி என தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் சிறை மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதனால், அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: RBI Governor : பணவீக்கத்தின் மீது போர்... வட்டி விகிதங்கள் குறித்து உண்மை உடைத்த ஆர்.பி.ஐ கவர்னர்!
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டு அதே ராம்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து இந்த வழக்கை இன்று (மே 24) விசாரித்த ராம்பூர நீதிமன்றம், அசாம் கான் நிரபராதி என தீர்ப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் பதவியை பறிப்பதற்காக பாஜக வேண்டுமென்றே இதுபோன்ற பொய் வழக்குகளை போட்டு காரியம் சாதிப்பதாகவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இதே நிலைதான் ஏற்பட்டதாகவும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, அசாம் கான் குற்றவாளி என தீர்ப்பளித்த அதே நீதிமன்றம்தான் இன்று அவர் நிரபராதி என தீர்ப்பு வழங்கியுள்ளது என்ற கருத்தையும் முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: டி.கே.சிவகுமார் திடீர் டெல்லி பயணம்.. கட்சிக்குள் விரிசலா?