டெல்லி: அமெரிக்க தடயவியல் மற்றும் பொருளாதார நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கையை அடுத்து அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு அதளபாதாளத்திற்கு இறங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதானி நிறுவனம் 7 லட்சம் கோடி ரூபாயை இழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அதானி குழுமத்தில் போட்ட முதலீடுகள் காரணமாக எல்ஐசி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு நிறுவனங்கள் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர் சந்தை மதிப்பு இழப்பு காரணமாக பொது பங்கு வெளியீடு (எஃப்.பி.ஓ) மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்ட அதானி குழுமம் அதை ரத்து செய்தது.
திட்டமிட்ட பங்கு வெளியீட்டு தொகையான 20ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டிய போதும், முதலீட்டாளர்கள் நலனை கருத்தில் கொண்டும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக கொண்டும் பொது வெளியீட்டை ரத்து செய்ததாக அதானி குழுமம் தெரிவித்தது. இது தொடர்பாக அதானி குழும தலைவர் கவுதம் அதானி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் அதானி நிறுவனங்களால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கடன் விவரங்களை வெளியிடுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், அதானி குழும நிறுவனங்களின் மீது உள்ளூர் வங்கிகள் செய்துள்ள முதலீடுகள் மற்றும் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து தகவல்களை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: "முதலிட்டாளர்கள் நலன் தான் முக்கியம்" - கவுதம் அதானி