புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி நேற்று (ஜூன் 15) வழக்கமாக சட்டமன்றத்திற்கு வந்தார். அப்போது முதலமைச்சரை சந்திக்க கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்ற மூதாட்டி மற்றும் அவரது தம்பியான மாசிலாமணி ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்துள்ளனர். முதலமைச்சர் காரை விட்டு இறங்கியவுடன், அந்தப் பெண் கதறி அழுது கொண்டே முதலமைச்சர் காலை பிடித்துக் கொண்டார்.
அதே நேரத்தில் மாசிலாமணி தன் கையில் இருந்த பெட்ரோல் எடுத்து மேலே ஊற்றிக் கொண்டார். இதில் சில துளிகள் முதலமைச்சரின் காலிலும் பட்டது. இந்த நேரத்தில் மூதாட்டி தனது சொத்துக்களை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும், சொத்தையும் காப்பாற்றும்படி கதறி அழுதார்.
அவரது சத்தம் கடுமையாக எழுந்ததைத் தொடர்ந்து அங்கு இருந்த காவல் துறையினர் மற்றும் சட்டமன்ற காவலர்கள் உள்ளே ஓடி வந்து சூழலைப் பார்த்து பெட்ரோலை ஊற்றியவரை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். மேலும், முதலமைச்சரின் காலைப் பிடித்து இருந்த பெண்ணை பெண் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர், சட்டமன்ற வாசலில் வைத்து அவர்களை விசாரித்தபோது, தவமணியின் ஒரு ஏக்கர் நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாறாக தனது குடும்பத்தாரை கும்பல் ஒன்று தாக்கி வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இந்தப் புகார்களைப் பெற்ற காவல் கண்காணிப்பாளர் வீரவல்லவன், ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து தவமணியின் கணவர் செல்லதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோர்க்காடு கிராமத்தில் எங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், போலி பத்திரம் தயாரித்து சிலர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே இது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் குடும்பத்தினர் அனைவரும் சட்டமன்றத்துக்கு வந்து முதலமைச்சரிடம் முறையிட்டோம். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான எனது நிலத்தை மீட்டுத் தருமாறு கோரினார். இந்த சம்பவத்தால் அரைமணி நேரத்திற்கு புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நீடித்தது.
இதனிடையே சட்டமன்ற வளாகத்திற்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நார சைதன்யா மற்றும் உயர் அதிகாரிகள் சட்டமன்றத்திற்கு உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். மேலும், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நார சைதன்யா “முதலமைச்சருக்கு எப்போதும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் பொதுமக்கள் தன்னை சந்திக்க வரும்போது தடுக்க வேண்டாம் என ஏற்கனவே முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அதனால்தான் இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. இனி இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்படாது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாவர்க்கர் அவுட்; 'இனி சாவித்ரி பூலே, அம்பேத்கர் கவிதைகளே இடம்பெறும்' - கர்நாடகா அரசு அதிரடி