புதுச்சேரி: புதுச்சேரியில் சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 72 ஆசிரியர்கள், கல்வித் துறையில் அலுவல் பணி செய்ய அழைக்கப்பட்டு இருந்தனர். இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும்போது, ஆசிரியர்களை வேறு பணிக்கு மாற்றுவது மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் எனவும், இதனால் மற்ற ஆசிரியர்கள் பணிச் சுமையால் பாதிக்கப்படுவர் எனவும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இதனைக் கண்டித்து, கல்வித்துறை அலுவலகம் முன்பு இன்று (அக்.27) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கிட, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், திராவிடர் கழகம் சிவ வீரமணி, இளங்கோ, தமிழர் களம் அழகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தினால் கல்வித்துறை அலுவலகத்தின் 2 நுழைவு வாயிலும் பூட்டப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்தனர். மேலும், வாயில் கதவைத் திறந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கல்வித்துறை வளாகத்திற்குள் நுழைந்து, படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
“கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அயல் பணி அடிப்படையில் சட்டமன்றத்தில் பணியாற்றும் 100 ஆசிரியர்களை, மீண்டும் பணிக்கு திரும்ப அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தி, கல்வித்துறையை முற்றுகையிட்டு சமூக அமைப்பினரின் போராட்டம் நடைபெற்றது.
மேலும், விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில் அந்தந்த பள்ளி முன் ஆசிரியர்களின் பட்டியல், புகைப்படத்துடன் வெளியிடப்படும் எனவும் திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் தெரிவித்தார். இதனிடையே, போராட்டக் காரர்களை போலீசார் சமாதானப்படுத்தி இணை இயக்குநர் சிவகாமியிடம் அழைத்துச் சென்றனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: அம்பத்தூரில் போலீசாரை அடிக்க துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு.. 5 வடமாநில தொழிலாளர்கள் கைது!