இலங்கை கொழும்பில் வைத்து இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது, இலங்கையின் முன்னாள் அமைச்சரான பழனி திகாம்பரம், இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை உதவிகளாக வழங்கியதிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ’இலங்கையில் வாழ்கின்ற மிகவும் கஷ்டமான மக்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த முழு நிவாரணப்பொருட்களும் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, இதை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கம் மேலும் உதவிகளை வழங்க வேண்டும்.
இந்திய அரசாங்கத்தின் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை மக்களுக்கு அதிகளவிலான உதவிகளை செய்து கொடுத்து வந்துள்ளார். வீடுகள், கலாசார மண்டபங்கள், மருத்துவமனைகள் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை அவர் செய்து கொடுத்துள்ளார். அதேபோல், இந்த நெருக்கடியான காலத்திலும் கூட இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொடுக்கின்ற உதவிகளினால் தான் இலங்கை வாழ்கின்றது.
இல்லாவிட்டால் இலங்கை திவாலாகியிருக்கும். இதனால் துரிதமாக செயற்படுகின்ற இந்திய அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அதேவேளை, கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெறுவது சாத்தியம் இல்லை’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பாடல்கள் கேட்கத் தடை!