கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நரேந்திரபூரின் ஜகதீஷ்பூரில் வீட்டின் செப்டிக் டேங்கில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியின் போது எலும்புக்கூடு சிக்கியது. அதே பகுதியில் 2013ஆம் ஆண்டு காணாமல் போன பெண்ணின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்களிடையே பேசப்பட்டுவருகிறது.
ஜகதீஷ்பூரில் உள்ள ஒரு வீட்டை சஞ்சித் சர்க்கார் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கினார். அதைத்தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 2) செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய ஆட்களை வரவழைத்துள்ளார். இந்த சுத்தம் செய்யும் பணியின்போது பெண்ணின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.
அதனால் சந்தேகமடைந்த வேலை ஆட்கள் வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சஞ்சித் சர்க்கார் தொடர்ந்து சுத்தம் செய்யுமாறு தெரிவித்துள்ளார். அதன்பின் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த ஊர் மக்கள் நரேந்திராபூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மண்டை ஓடு உள்பட எலும்புகளை மீட்டனர். அதன்பின் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளரின் மனைவி பாயல் சர்க்கார் கூறுகையில், இந்த வீட்டை எனது கணவர் சஞ்சித் சர்க்கார் 5 ஆண்டுகளுக்கு முன்பே விலைக்கு வாங்கினார்.
அப்போதிலிருந்து செப்டிக் டேங்கை நாங்கள் சுத்தம் செய்யவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று சுத்தம் செய்ய முடிவு செய்து, பணிகளை தொடங்கினோம். அப்போது எலும்புக்கூடு மீட்கப்பட்டது. வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு வீட்டை விற்பனை செய்தவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனிடையே பக்கத்து வீட்டின் உரிமையாளர் டிபங்கர் நாஸ்கர் கூறுகையில், ஜகதீஷ்பூரில் வசித்து வந்த கிருஷ்ணா சர்தார் மற்றும் சாயா மண்டல் ஆகிய 2 பெண்கள் 2013ஆம் மாயமாகினர். இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதே வீட்டின் உரிமையாளரை நாங்கள் சந்தேகித்தோம்.
அவரை தாக்கி ஜகதீஷ்பூரை விட்டு வெளியேற்றினோம். அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இப்போது மீட்கப்பட்ட எலும்புக்கூடு மாயமான பெண்களில் ஒருவருடையதாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
இதனிடையே போலீசார், 2 பெண்கள் மாயமான வழக்கை இன்னும் முடிக்கவில்லை. இந்த எழும்புக்கூடை வைத்து விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளோம். அதோடு, டிஎன்ஏ அறிக்கைக்காக ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் பெண்ணின் அடையாளம் தெரியவரும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 9 வயதில் காணாமல் போன சிறுவன் ஆதார் மூலம் 15 வயதில் மீட்பு