டெல்லி: டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதேபோல் சிசோடியாவிடமும் பல முறை சிபிஐ விசாரணை நடத்தியது. தன் மீதான ஊழல் வழக்கு முற்றிலும் புனையப்பட்டது என்று சிசோடியா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. விஜய் நாயர், சமீர் மகேந்திரு, அருண் பிள்ளை, குல்தீப் சிங், நரேந்திர சிங் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முக்கிய குற்றவாளியாக பேசப்பட்ட மணீஷ் சிசோடியாவின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், டெல்லி மதுபான ஊழல் வழக்கு முழுவதும் போலியானது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சிபிஐ குற்றப்பத்திரிகையில் மணீஷ் சிசோடியாவின் பெயர் இல்லை. இந்த முழு வழக்குமே போலியானது. சிபிஐ சோதனையிலும் எதுவும் கிடைக்கவில்லை. 800 அதிகாரிகள் 4 மாதங்களாக நடத்திய விசாரணையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கல்வித்துறையின் மாற்றங்களால் நாட்டின் கோடிக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் மணீஷ் சிசோடியா. அப்படிப்பட்டவரைப் பொய் வழக்கில் சிக்க வைத்து அவப்பெயரை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: என்னை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது - மணீஷ் சிசோடியா