அகமாதாபாத்: குஜராத்தின் வல்சாத் நகரில் உள்ள பர்தி தாலுகாவில் பார் ஆற்றங்கரையில் கடந்த ஆக. 26ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அதை சோதனையிட்டபோது, காரின் உள்ளே குஜராத்தி நாட்டுப்புற பாடகி வைஷாலி பல்சாரா கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைஷாலியின் உடற்கூராய்வு அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் கடந்த ஆக.27 அவரது தோழி பபிதாவை சந்திக்க வைஷாலி சென்றதாகக் கூறப்பட்டது.
இதனால், அவரது தோழியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப்பின் முரணமாக அவர் பதிலளித்துள்ளார். இதனால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, பாடகர் வைஷாலியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், வைஷாலியிடம் ரூ. 25 லட்சத்தைத் தான் கடனாக பெற்றதாகவும், அதைத் திருப்பித் தரும்படி தனக்கு நெருக்கடி அளித்ததாகவும் தோழி பபிதா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த நெருக்கடியாலும், அவருக்கு கொடுக்க வேண்டிய 25 லட்சம் ரூபாயையும் தவிர்ப்பதற்கும் கொலைத் திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்காக, தனது ஃபேஸ்புக் நண்பர் ஒருவருக்கு ரூ. 8 லட்சம் கொடுத்து வைஷாலியை கொலை செய்யக் கூறியதாக பபிதா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பபிதாவை கைது செய்த காவல் துறையினர், கொலை செய்த நபரை தேடி வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் பலரும் கைதுசெய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குஜராத்தி நாட்டுப்புறப் பாடகியான வைஷாலி தனது கணவர் ஹித்தேஷ் உடன் சேர்ந்து குஜராத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரேஷன் கடை பேனரில் பிரதமர் மோடியின் படம் ஏன் இல்லை? மாவட்ட ஆட்சியரை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன்....