டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உள்நாட்டில் தயாரான தடுப்பூசிகளை மருத்துவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் சுமார் ஒரு கோடி மக்களுக்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. நாட்டின் தேவைக்கு முன்னுரிமை அளித்து, மீதமுள்ள நாடுகளுக்கும் உதவி வருகிறது. இருப்பினும் பல்வேறு நாடுகள் உடனடியாக தங்களுக்கு கரோனா தடுப்பு மருந்தினை அளிக்குமாறு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, தடுப்பூசி விநியோகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலர் ஆதார் பூனவல்லா, "கோவிஷீல்ட் விநியோகத்திற்காக காத்திருக்கும் நாடுகள் அனைத்தும் சிறிது பொறுமை காக்க வேண்டும். எங்கள் நிறுவனத்திடம் இந்தியாவின் மிகப்பெரிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு உலகின் பிற பகுதிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பணியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். ஐ.நாவிற்கு இந்தியா தற்போது 2 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
சீரம் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 70 முதல் 80 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்கிறது. இவற்றை தேவைகளுக்கு ஏற்ப இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்யவே விரும்புகிறோம்" என்றார்.