பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்க உள்ளார். துணை முதலமைச்சராக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவை முன்னிட்டு கர்நாடக ஆளுநர் மாளிகை விழாக் கோலம் பூண்டு உள்ளது. பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே. 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மே. 13ஆம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 113 இடங்களே தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தாலும் முதலமைச்சரை தேர்வு செய்வது என்பது அந்த கட்சிக்கு எளிதாக அமையவில்லை. சட்டமன்றக் குழு கூடி முதலமைச்சரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், தலைகீழ் நிலையாக மாறி முடிவு எட்டப்படாத சூழல் ஏற்பட்டது.
மேலும் சட்டமன்றக் குழு கூடி முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியை காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கேவிடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனால் கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி மல்லிகார்ஜூன கார்கேவின் தலையில் வந்து விழுந்தது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்தது.
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் தலைநகர் டெல்லி சென்று, காங்கிரஸ் மேலிடத்தை சந்தித்து தனக்கு முதலமைச்சர் பதவி தர வேண்டியதற்காக காரணிகளை கூறினர். மேலும், மல்லிகார்ஜூன கார்கே டெல்லி இல்லத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இறுதியில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். கட்சி மேலிடம் ஒருவழியாக டி.கே. சிவகுமாரை சமாதானம் செய்து சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுத்தது. மேலும் கட்சியின் மேல் உள்ள விருப்பத்தினால் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டதாக டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று (மே. 19) முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையா, மற்றும் துணை முதலமைச்சர் வேட்பாளர் டி.கே. சிவகுமார் தலைநகர் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத்திடம் கடும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சரவை அமைப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (மே. 20) கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகை விழாக் கோலம் பூண்டு உள்ளது. பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விழாவில் 8 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆளுநர் மாளிகை மற்றும் மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : சித்தராமையா பதவியேற்பு விழா : 8 மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!