லூதியானா: பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபரான நசிர் தில்லோன், 1947ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது பிரிந்து சென்ற குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த 67 வயதான சகினா பீபியின், சகோதரர் குர்மெல் சிங் க்ரேவால் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசித்து வருவதாக நசிர் தில்லோனுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அவர் சகினா பீவியை சந்தித்து விபரத்தை கூறினார். பிறகு தனது சகோதரரை சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் குறித்து சகினா பீவியிடம் வீடியோ பதிவு செய்து, அதை யூடியூபில் வெளியிட்டார். இந்த வீடியோவைப் பார்த்த குர்மெல் சிங் நெகிழ்ச்சியடைந்துள்ளார். அவரும் சகோதரியைக் காண ஆவலாக இருக்கிறார்.
மேலும் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு சென்று, தனது சகோதரியை பார்க்க முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் சகோதரியைப் பார்க்க ஆயத்தமாகி வருகிறார். எதிர்வரும் ரக்சா பந்தனை இருவரும் இணைந்து கொண்டாட உற்சாகத்துடன் இருக்கின்றனர்.