ஸ்ரீநகர்: காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி (JeI) அமைப்புடன் தொடர்புடையவர்களின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, பயங்கரவாத தொடர்புகள் காரணமாக பிப்ரவரி 2019ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. டாக்டர் அப் ஹமீத் ஃபயாஸ் (அமீர் ஜமாத்) உட்பட அதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அனந்தநாக் மாவட்ட மாஜிஸ்திரேட் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி சொத்துக்கள் சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளார். அதன்படி அறிவிக்கப்பட்ட சொத்துக்களில் விவசாய நிலம், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு சொத்துக்கள் அடங்கும்.
இவற்றை அலுவலர்கள் இன்று (நவம்பர் 26) பறிமுதல் செய்தனர். அதில் ஃபலாஹ்-இ-ஆம் அறக்கட்டளை (FAT) அலுவலகம் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடத்துடன், பல்வேறு கிராமங்களில் அமைப்பிற்கு சொந்தமாக உள்ள 5 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தெற்கு காஷ்மீரின் ஷோபியானில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி சொந்தமான ரூ.2.58 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒன்பது இடங்களை இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாநில புலனாய்வு முகமை சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்கப்படும் - பாஜக வாக்குறுதி