மும்பை: மகாராஷ்டிராவில் 2022ஆம் ஜூன் மாதம் சிவசேனா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. அக்கட்சியின் மற்றொரு தரப்பான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையை நிரூபித்ததன் அடிப்படையில் புதிய அரசு பதவியேற்றது. அந்த வகையில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றார்.
இவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இதனைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய 2 தரப்பும் கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக வழக்குகள் தொடுத்தும், தேர்தல் ஆணையத்தை நாடியும் வந்தன. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியையும், அதன் சின்னமான கட்சியின் வில் அம்பையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு கட்சியின் விதிகள் மற்றும் பெரும்பான்மையின் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏக்நாத் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்காக ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்களுடையதே உண்மையான சிவசேனா கட்சி என்பது நிரூபனமாகிவிட்டது. பாலாசாகேப்பின் சிந்தனையின்படியே கடந்த ஆண்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தோம் எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு உத்தவ் தாக்கரேவின் தரப்பில் இருக்கும் சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே தரப்பை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கும் ஆணையத்தின் முடிவான ஜனநாயக படுகொலையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லக்னோவில் எம்பிபிஎஸ் மாணவி தற்கொலை