ஷியோபூர்: மத்தியப் பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தில் ரிஜெண்டா கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், சம்பல் ஆற்றின் கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஆற்றிலிருந்து கரைக்கு வந்த முதலை ஒன்று சிறுவனை தாக்கியதாக தெரிகிறது. இதைக் கண்ட கிராம மக்கள் முதலையை பிடித்து கட்டி வைத்தனர். அதேநேரம் சிறுவன் மாயமாகியுள்ளான். இதையடுத்து முதலை சிறுவனை விழுங்கிவிட்டதாக நினைத்த கிராம மக்கள், அதன் வயிற்றை கிழித்து சிறுவனை உயிருடன் மீட்க முயற்சித்தனர். முதலையின் வாயில் குச்சியை விட்டு அதனை துன்புறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், முதலை சிறுவனை விழுங்கியிருக்காது என கூறினர். ஆனால், கிராம மக்கள் முதலையை விடுவிக்காமல் அடம்பிடித்தனர். இதையடுத்து சிறுவன் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்பதால், போலீசார் ஆற்றில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மக்களிடம் பல மணி நேரம் போராடிய வனத்துறையினர், முதலையை மீட்டு ஆற்றில் விட்டனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் சடலம் ஆற்றில் மிதந்துள்ளது. சிறுவனின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அதேநேரம் மரணம் எப்படி நேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:5 வயது மாணவியை 30 விநாடிகளில் 10 முறை அறைந்த ஆசிரியை - வீடியோ வைரல்!