மும்பை(மகாராஷ்டிரா): அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய, சரத் பவார், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, தனது முடிவைத் திரும்ப பெற்றார்.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார் கூறுகையில், ''உங்கள் நுண் உணர்வுகளை என்னால் மதிக்காமல் இருக்க முடியாது. எனது ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என்று என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தையும் உங்கள் அன்பின் காரணமாக நான் மதிக்கிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுகிறேன்'' என்று அறிவித்தார்.
அப்போது இந்த செய்தியாளர் சந்திப்பில் அஜித் பவார் இல்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த சரத்பவார், 'ஒரே செய்தியாளர் சந்திப்பில் அனைவரும் கலந்து கொள்ள முடியாது. மக்களில் சிலர் இங்கே இருக்கிறார்கள். வேறு சிலர் இல்லை. ஆனால் இன்று காலை, கட்சியின் மூத்த தலைவர்கள், ஒருமனதாக முடிவெடுத்து, எனக்கு தெரியப்படுத்தினர். அந்த முடிவின் மூலம் அனைவரும் தங்கள் உணர்வுகளை அன்பை வெளிப்படுத்தினர். எனவே, இங்கு யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்ற கேள்வியை எழுப்புவது அல்லது இதற்கு அர்த்தம் தேடுவது சரியல்ல’ என திட்டவட்டமாகப் பதிலளித்தார்.
மேலும், ''எங்களது கட்சியின் முடிவுக்குப் பிறகு, எனது முடிவை திரும்பப் பெற்றேன். அனைவரும் ஒற்றுமையாக, இதைப் பற்றி விவாதிக்கிறோம். குழுவில் மூத்த தலைவர்கள் உள்ளனர்'' எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.