மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் உள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் தற்போது ஆர்யன் கான் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரபல நடிகரும் தந்தையுமான ஷாருக் கானும், ஆர்யன் கானின் தாயும் ஷாருக் கானின் முன்னாள் மனைவியுமான கௌரி கானும் ஆர்யன் கானிடம் காணொலிக்காட்சி வாயிலாக தொடர்புக்கொண்டு பேசியுள்ளனர்.
பிஸ்கட்டும் தண்ணீரும்...
முன்னதாக, சிறை கேன்டீன் செலவுக்காக ஆர்யன் கானுக்கு ரூ. 4,500 மணி ஆர்டர் அனுப்பியுள்ளனர். சிறைவாசிகளுக்கு அதிகபட்சமாக 4,500 ரூபாய்தான் மணி ஆர்டர் மூலம் பெற முடியும் என்றும் அதை கேன்டீனில் வைப்புத்தொகையாக செலுத்தி, அதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
ஆர்யன் கான் கடந்த ஏழு நாள்களாக தண்ணீரையும், பிஸ்கட்டையும் தவிர வேறு உணவு எதையும் உட்கொள்ளவில்லை என சிறை அலுவலர்கள் தரப்பில் கூறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 20 பேர் கைது
மும்பை அருகே சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட போது ஆர்யன் கான் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்களால் அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் நைஜீரிய நாட்டினர் இருவர் உள்பட 20 பேர் கைதாகியுள்ளனர். வழக்கில் பிணை கேட்டு ஆர்யன் கான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான உத்தரவு அக்டோபர் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இதையும் படிங்க: ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்தவருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்