Sabarimala: பத்தனம்திட்டா: கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதியுடன் நிறைவுபெற்றது. தொடர்ந்து மகர விளக்கு பூஜை தொடங்கிய நிலையில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
கடந்த இரு மாதங்களில் ஏறத்தாழ 50 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு மற்றும் உடனடி பதிவு செய்து கொண்டதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் தாராளமாக காணிக்கைகளையும், நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
இந்நிலையில், ஜனவரி 20ஆம் தேதியுடன் மகர விளக்கு பூஜை நிறைவடையும் நிலையில், கோவில் நடை சாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ஆம் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் எண்ணிகை குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதால் கோவில் வருவாய் பன்மடங்கு பெருகி உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
நடப்பு சீசனில் கடந்த 17ஆம் தேதி வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதுவரை இல்லாத அளவாக காணிக்கை வசூல் அதிகபட்சமாக 320 கோடி வரை கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பாண்டில் சபரிமலை ஐயப்பன் கோவில் உண்டியல் காணிக்கை வசூல் ஒட்டுமொத்தமாக 330 கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை ரூபாய் நோட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாகவும், 3 அறைகளில் மலைபோல் குவிந்துள்ள நாணயங்களை இன்னும் எண்ணுவதற்கு தொடங்கவில்லை எனவும் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 ஆறைகளில் மட்டும் ஏறத்தாழ 7 கோடி ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் இருக்கும் என தேவசம் போர்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 2018ஆம் ஆண்டு 260 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி இருந்த நிலையில், தற்போது அதைவிட அதிகபட்ச காணிக்கை வசூலாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணிக்கை எண்ணும் பணியில் ஏறத்தாழ 60 பணியாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு குளறுபடிகளை தவிர்க்க உண்டியல் காணிக்கை குறித்த தெளிவான அறிக்கையை அளிக்குமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரில் ராகுல் காந்தி பாதயாத்திரை... ஃபரூக் அப்துல்லா உற்சாக வரவேற்பு!