ராய்பூர்: சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர யாதவ் கடந்த ஜூலை 1 ஆம் தேதி, ராகுல் காந்தி குறித்து தவறான செய்தி பரப்பியதாக தனியார் நியூஸ் தொலைக்காட்சி மீது ராய்பூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அதில், வயநாடு அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என ராகுல் காந்தி கூறியதை, உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லாலின் கொலையாளிகளை அவர் மன்னிப்பதாக ஒரு தொலைக்காட்சி சேனல் தவறாக வெளியிட்டது.
ஆகையால், தனியார் தொலைக்காட்சி இயக்குநர் மற்றும் தலைவர், அதன் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் ஆகியோர் மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் போலியான செய்திகளைப் பரப்ப சதி செய்ததாக புகார் அளித்தார்.
தேவேந்திர யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில், பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாகவும், மக்களின் மத உணர்வுகளை சீர்குலைத்ததாகவும் ரஞ்சன் மற்றும் தனியார் தொலைக்காட்சி மீது கடந்த சில நாட்களுக்கு முன் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூலை 5) காலை காஜியாபாத்தில் உள்ள தொகுப்பாளர் ரஞ்சன் வீட்டுக்கு சென்று போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: இந்து கடவுள்களின் உருவம் இருந்த காகிதத்தில் கோழிக்கறி விற்பனை - வியாபாரி கைது!