மும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான 'சாம்னா' பத்திரிகையின் தலையங்கத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “பிரதமர் நரேந்திர மோடியிடம் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தை நேரில் வலியுறுத்திய மம்தா பானர்ஜியின் செயல் துணிச்சல்மிக்கது.
முதலமைச்சர்கள் தங்கள் மாநில குடிமக்களின் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பானர்ஜி வலியுறுத்திவருகிறார். பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்துவதன் மூலம் மம்தா பானர்ஜி, “மத்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் உறுதியான விசாரணை தேவை. இது குறித்து ஒரு உறுதியான விசாரணை குழுவை மத்திய அரசு அமைக்கும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்த முதல் மாநிலம் மேற்கு வங்காளம்” என்றார்.
இஸ்ரேல் நாட்டின் தனியார் நிறுவனமாக பெகாசஸ் மென்பொருள் வாயிலாக இந்திய பிரமுகர்கள் 300 பேர் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பிரதமரை சந்தித்தார் மம்தா பானர்ஜி