மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த மார்ச் 27ஆம் தேதி அம்மாநிலத்தின் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமின் 47 தொகுதிகளுக்குமென நாடு முழுவதும் மொத்தம் 77 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் நாளை (ஏப்ரல் 1ஆம் தேதி) அம்மாநிலத்தின் 24 பர்கனாஸ், பஷிம் மேதினிபூர், பங்குரா, பர்பா மேதினிபூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நட்சத்திரத் தொகுதியான நந்திகிராம் தொகுதியும் இடம்பெற்றுள்ளது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. முன்னதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ள சுவேந்து அதிகாரி, மம்தாவுக்கு எதிராக இங்கு களம் காண்கிறார். நந்திகிராம் தொகுதியின் நடப்பு எம்எல்ஏவான இவர், 2007ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார்.
இந்நிலையில், சுவேந்து அதிகாரி தனது தொகுதியில் அவர் சார்ந்திருந்த கட்சியின் முன்னாள் தலைவரும், முதலமைச்சருமான மம்தாவை எதிர்கொள்வது, தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. தவிர இடது, ஐஎஸ்எஃப் காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக மீனாட்சி முகர்ஜி இத்தொகுதியில் களம் காண்கிறார்.
அதேபோல் அம்மாநிலத்தின் டெப்ரா தொகுதியில் பாஜகவின் சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அலுவலரான பாரதி கோஷும், திரிணாமூல் காங்கிரஸின் சார்பில் மற்றொரு முன்னாள் ஐபிஎஸ் அலுவலரான ஹுமாயூன் கபீரும் களம் காண்கின்றனர்.
கரக்பூர் சதர் தொகுதியில், நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஹிரன்மோய் சட்டோபாத்யாவும், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் இயக்குநரும், மகேந்திர சிங் தோனியின் நெருங்கிய நண்பருமான பிரதீப் சர்க்காரும் போட்டியிடுகின்றனர். மேலும், சோஹம் சக்ரவர்த்தி, சயந்திகா பானர்ஜி ஆகிய நடிகர்களும் முறையே சண்டிபூர், பாங்குரா தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: 'திரிணாமுல் காங்கிரஸில் 21 ஆண்டுகள் இருந்ததை எண்ணி வெட்கப்படுகிறேன்'- சுவேந்து அதிகாரி!