ஆலப்புழா: கேரளாவின் கடலோர மாவட்டமான ஆழப்புழாவில் அடுத்தடுத்து இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக, எஸ்பிடிஐ கட்சியின் தலைவரும், இரண்டாவதாக பாஜகவின் தலைவர் ஒருவரும் உயிரிழந்தனர்.
நேற்றிரவு (டிச. 18) எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ். ஷான், வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியில் வந்த கார் அவர்மீது மோதியதில் அவர் கீழே விழுந்துள்ளார்.
12 மணிநேர இடைவெளியில்...
காரில் இறங்கிய கும்பல் ஷான் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. அவர் பலத்த காயங்களுடன் கொச்சி மருத்துவமனையில் நள்ளிரவில் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷான் மீதான தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என எஸ்டிபிஐ குற்றஞ்சாட்டியது.
இதற்கு பின்னர், இன்று (டிச. 19) அதிகாலையில் பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் சங்க மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசனை, ஒரு கும்பல் அவரின் வீடு புகுந்து கொலைசெய்துள்ளது.
பாஜகவின் மாநிலக் குழுவில் இருக்கும் ஸ்ரீனிவாசனின் கொலை, ஷான் மரணத்திற்கான பழிவாங்கும் செயலா என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால், ஆழாப்புழாவில் வன்முறை எழும் சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கன்னட - மராட்டிய அமைப்பினர் மோதல்: 144 தடை; 27 பேர் கைது