டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 108ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக இன்று (ஜனவரி 3) தொடங்கி வைத்தார். இந்த மாநாடு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. மகளிருக்கு அதிகாரம் அளித்தலுடன் நீடித்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இந்திய அறிவியல் மாநாட்டின் தொழில்நுட்ப அமர்வுகள் 14 பிரிவுகளாக நடைபெறுகிறது.
இதில் மகாராஷ்டிரா ஆளுநரும், மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பகத் சிங் கோஷ்யாரி, மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழக நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஆலோசனை குழுவின் தலைவருமான நிதின் கட்கரி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவந்திர பட்னாவிஸ், ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுபாஷ் ஆர் சௌத்ரி, கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மாநாடு சங்கத் தலைவர் விஜய் லஷ்மி சக்சேனா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவின் அறிவியல் தற்சார்பை (ஆத்ம நிர்பார்) நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். அறிவியலில் வளர்ச்சி என்பது தேவைகளை பூர்த்தி செய்வதை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். இந்த மாநாடு விஞ்ஞான சமூகத்திற்கு உத்வேகமாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை கருத்தில்கொண்டு அதுதொடர்பான கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும். உலக மக்கள்தொகையில் 17-18 சதவீதம் பேர் நமது நாட்டில் உள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையிலான மக்களின் முன்னேற்றம் உலக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்தியா முன்னேற்றத்திற்காக அறிவியல் வழிகளைப் பயன்படுத்துகிறது. இதற்கு எடுத்துக்காட்டு, அறிவியல் துறையில் சிறந்து விளக்கும் 130 நாடுகளின் பட்டியலில் 2015ஆம் ஆண்டில் 81ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 40ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பதை கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகள், வாழ்க்கையில் மாற்றங்களை நிகழுத்தும்போது, பெரிய சாதனைகளாக மாறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மன்னிப்பு கூறவே 'ஹே ராம்' படம் எடுத்தேன்.. ராகுலிடம் விளக்கிய கமல்