புதுச்சேரி: 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அண்மையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதே போல் கல்லூரிகளும் திறக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
மாநிலத்தில் கரோனா பாதிப்பு முழுமையாக குறையவில்லை எனறும், எனவே பள்ளி, கல்லூரி திறப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இன்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பள்ளி, கல்லூரி திறப்பு இல்லை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி,கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். பள்ளி,கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், "தனியார் பள்ளி கல்வி கட்டணம் குறித்து கண்காணிக்கப்படுவதாகவும், கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுகளை ஆன்லைனில் நடத்த பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.