வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. 1954ஆம் ஆண்டின் அரசியலமைப்பு சட்டம் ஏழாவது பிரிவில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை நீக்கக் கோரி தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் ஜனவரி 11ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும், இரு தரப்பும் ஒத்து கருத்துக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இம்மாதிரியான நிலையில், பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தால் அந்த வாய்ப்பு கிட்டாது எனவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த நீதிமன்றம், "பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கவே விரும்புகிறோம். பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தலைமை நீதிபதி தெரிவித்ததால், விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம்" என்று கூறியது.
இருப்பினும், தற்போது வரை விவசாயிகளின் போராட்டம் குறித்த விவகாரத்தில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாததற்கு, நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாதது குறித்துப் பேசிய துணைத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "நாங்கள் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுவருவதால், இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை" என்றார்.
நேற்று, விவசாய சங்கப் பிரதிநிகள், மத்திய அரசு இடையே நடைபெற்ற ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை எந்தவித முன்னேற்றமும் இன்றி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.