டெல்லி: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நேரத்தில், அவரது நீதிமன்ற காவல் ஜூலை 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோதக் காவலில் வைத்ததாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி இருவரும் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்றும், அவரை நீதிமன்றக் காவலில் விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின்னர், ஆட்கொணர்வு வழக்குத் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பிலும் தனியாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கடந்த 14ஆம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஜூலை 20) செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள் முறையிட்டனர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது. மனுக்களை உடனடியாக விசாரிக்காவிட்டால், செந்தில் பாலாஜி போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும், அதன் பிறகு மனுக்களை விசாரிப்பது பயனற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.