டெல்லி: தமிழ்நாடு அரசுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழ்நாட்டில் 40,000 கோயில்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மாநில அரசு தன்னிச்சையாகவும் அரசியலமைப்பிற்கு விரோதமாகவும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் நியமனங்களை மேற்கொள்ள உள்ளது.
கோயில் சொத்துகளின் உரிமையாளராக அரசு இருக்கக்கூடாது. கோயில் நிர்வாகம் மட்டுமே அர்ச்சகர் நியமனங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கோயில்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் அர்ச்சகர்களை மாநில அரசு நியமிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ கூடாது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதேபோல பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்களுடன் இந்த மனுவையும் பட்டியலிடலாம். தனிப்பட்ட மனுவாக விசாரிக்க முடியாது. அதேபோல அர்ச்சகர் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.
அதோடு 40,000 கோயில்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை தமிழ்நாடு அரசு தன்னிச்சையாகவும் அரசியலமைப்பிற்கு விரோதமாகவும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக எழுப்பட்ட மனுவுக்கு அந்த அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஞானவாபியைப் போல, ஷாஹி ஈத்கா மசூதியில் கள ஆய்வு செய்ய உத்தரவு...