டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 202 நகரங்களில் 3,682 தேர்வு மையங்களில் சுமார் 16 லட்சத்து 14 ஆயிரத்து 777 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
இதில், மகாராஷ்டிராவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் வைஷ்ணவி போபாலி, அபிஷேக் சிவாஜி ஆகிய இரு மாணவர்களின் வினாத்தாள்கள், ஓஎம்ஆர் தாள்கள் இரண்டும் மாறியுள்ளன.
குளறுபடியால் தடை
இந்தக் குளறுபடியை எதிர்த்து இரு மாணவர்களின் தரப்பில் இருந்தும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்பட்ட குளறுபடிக்கு பதிலீடாக இருவருக்கும் தனித்தேர்வு நடத்த வேண்டும் எனவும் அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என அக். 20ஆம் தேதி உத்தரவிட்டது.
தற்போது, தேர்வு முடிந்து ஏறத்தாழ 45 நாள்கள் நிறைவடைந்த நிலையில், நாடு முழுவதும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
2 பேரா...? 16 லட்சம் பேரா...?
இதற்கிடையே, மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எல் நாகேஸ்வர ராவ், சஞ்சிவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் இன்று (அக். 28) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள்," தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு அந்த இரு மாணவர்களின் தேர்வு குறித்து நாங்கள் முடிவெடுப்போம். இரண்டு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பது ஏற்புடையதல்ல. எனவே, மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிடுகிறோம்" என்றனர்.
தற்போது, நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை நீங்கியுள்ளதால், தேசிய தேர்வு முகமை விரைவில் முடிவுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து குழந்தை பிரசவித்த 17 வயது சிறுமி - கேரளாவில் அதிர்ச்சி