டெல்லி: கோயம்புத்தூர்க் குண்டு வெடிப்பு விவகாரம், குற்றவாளிகளின் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் பல அப்பாவி பொதுமக்கள் உட்பட மொத்தம் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், ஒரு சிலர் மட்டும் மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை ஆகியுள்ளனர். ஆனால், அல் உம்மா இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தற்போது வரையில் குற்றவாளிகளாகக் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அல் உம்மா இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஐந்து பேர்கள் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "கோவைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுக் கடந்த 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறோம். வயது மூப்பு, உடல் ரீதியான பிரச்சனை, மருத்துவ பரிசோதனை ஆகியவை உள்ளது. அதனால் கருணையின் அடிப்படையில் எங்களை இந்த விவகாரத்திலிருந்து ஜாமீன் வழங்கி விடுதலை செய்ய வேண்டும்." என மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: “மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, மனுதாரர்கள் தரப்பில் 25 வருடங்களாகச் சிறையில் இருப்பது, வயது மூப்பு, உடல் ரீதியான பிரச்சனை, மருத்துவ பரிசோதனை ஆகிய காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் குற்றத்தின் தன்மையைப் பார்க்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார். அரசு தரப்பில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் 58 பேர் உயிரிழந்தனர். 200க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இது கோயம்புத்தூர் பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் கண்டிப்பாக ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அக்.12-இல் கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!