டெல்லி: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்கக் காலம் தாழ்த்துவதாகத் தமிழ்நாடு ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்தது.
அதில், "தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய 12 மசோதாக்கள் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிப் பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதில், குறிப்பாகத் தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்திடாமல் வைத்து இருக்கும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றங்கள் குறித்த விசாரணை மற்றும் விசாரணைக்கான அனுமதி, பல வருடங்களாகச் சிறையில் இருக்கும் கைதிகளில் முன்கூட்டி விடுதலை செய்வது, தினசரி மனுக்கள், பணி நியமன ஆணைகள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவது போன்று 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை 12 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், பல மாதங்களாக இவை நிலுவையில் உள்ளன. இதனால் தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது ஆளுநர் தரப்பில், தமிழ்நாடு அரசு அனுப்பிய 181 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், 5 மசோதாக்கள் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று உள்ளதாகவும், 9 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் மற்றும் 5 மசோதாக்கள் அக்டோபர் 2023ஆம் ஆண்டு தான் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலுவையிலுள்ள மசோதாக்கள் குறித்து முடிவுகள் எடுக்கக் கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (டிச.01) மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, "நவம்பர் 13ஆம் தேதி ஆளுநர் மசோதாக்களைத் திருப்பி அனுப்பியுள்ளார். 18ஆம் தேதி மீண்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு ஒரு நாட்களுக்கு முன்பு 10 மசோதாக்களையும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பியுள்ளது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பில் அட்டர்னிக்கு ஜெனரல் வெங்கட் ரமணி ஆஜராகி, "ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்கவும் திருப்பி அனுப்பவும் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 200ன் படி ஆளுநர் 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு, "ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்து பின் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். அதன்பின் தமிழ்நாடு அரசு மீண்டும் சட்டமன்றத்தில் அதே மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பி உள்ளனர். அதனை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளனர்.
மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநர், மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? இதனை முதன் முறை மசோதாக்கள் ஆளுநரிடம் வரும் போதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கலாம் எனக் கேள்வி எழுப்பினர்.
மக்களின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் விரிவானது. ஆனால், ஆளுநர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டவர்கள் (Nominee) மட்டுமே அதைப் புரிந்து ஆளுநர்கள் செயல்பட வேண்டும். ஆளுநர் மசோதாக்களை முடக்கி வைக்கும் அதிகாரம் இல்லை.
மேலும், ஆளுநர் மசோதாக்கள் குறித்து முதலமைச்சரை நேரில் அழைத்துப் பேசி பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்வு காண வேண்டும். இதுவே சிறந்த வழி எனக் கூறி வழக்கு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!