ஐதராபாத் : 2023 - 24 நிதி ஆண்டு இன்று ( ஏப்ரல் 1) தொடங்கியது. நடப்பு நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் குறித்து எஸ்பிஐ வங்கி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் படி நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வசூல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த ஆய்வில் நாட்டின் கிழக்கு பகுதிகளில் உள்ள மூன்று மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்து காணப்படுகிறது.
குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் முந்தைய ஆண்டின் வரி வசூலை காட்டிலும் நடப்பு நிதி அண்டில் ஒற்றை இலக்கத்தில் வரி வசூல் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் 5 புள்ளி 4 சதவீதம் என்ற அளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தில் 13 புள்ளி 3 சதவீதமும், ஒடிசாவில் 10 புள்ளி 9 சதவீதம் என கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் இருக்கும் என எஸ்பிஐ நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 18 மாநிலங்களில் எஸ்பிஐ குழு நடத்திய ஆய்வில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 40 சதவீதத்திற்கும் மேலாக ஜிஎஸ்டி வரி வசூல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 30 சதவீதற்கும் மேலாக ஜிஎஸ்டி வசூல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரி வசூலின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அடுத்த நிதியாண்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இரட்டிப்பாக இருக்கும் என எஸ்பிஐ வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சவுமியா கந்தி கோஷ் தெரிவித்து உள்ளார்.
2023 - 24 நிதியாண்டில் மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூலில் 10 முதல் 20 சதவீதம் வரை மிதமான வளர்ச்சி விகிதத்தைக் பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் மத்திய அரசும் நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி 12 சதவிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. ஜூலை 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் முதல் ஐந்தாண்டு முடிவடைந்த பின்னர், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை ஒரு சில மாநிலங்கள் மட்டுமே சிறிய் அளவில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்றில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், மாநில அரசுகள் விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி வசூலில் மிதமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கின்றன. நடப்பு நிதி அண்டில் விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி 13 புள்ளி 6 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நிதி ஆண்டிலும் இதேபோல் வரி வளர்ச்சி விகிதம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களை பொறுத்தவரை குஜராத்தில் அதிகபட்ச விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி வசூல் வருவாய் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தை தொடர்ந்து சத்தீஸ்கரில் 24 புள்ளி 4 சதவீதமும், தெலங்கானாவில் 22 புள்ளி 3 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 21 புள்ளி 69 சதவீதமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி வசூல் 20 புள்ளி 9 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கனடாவில் இந்திய குடும்பத்தினர் பலி - எல்லை தாண்ட முயற்சித்த போது ஆற்றில் மூழ்கி பலி எனத் தகவல்!