டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சத்யேந்தர் ஜெயின், அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கின் கீழ் மே 31 முதல் திகார் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்து கொண்டிருந்தது.
இதனால் சிறை எண் 7ன் கண்காணிப்பாளார் அஜித்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அமைச்சர் ஜெயின் இருக்கும் சிறை அறையில், அவருக்கு கால் மசாஜ் செய்வது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் கால் மசாஜ் செய்தவர், பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்றும் தகவல்கள் வெளியாகின.
இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனமும், ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகழை கெடுக்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் ஜெயின் இருக்கும் சிறை அறையில், ஜெயினை சிறை கண்காணிப்பாளர் சந்திக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதனை டெல்லி பாஜக ஊடக செல்லின் தலைவர் ஹரீஷ் குரானா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனிடையே ஜெயின், திகார் சிறையில் சிறப்பு வசதிகளுடன் இருப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகளை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் முன்வைத்தது.
அதேநேரம் சிசிடிவி காட்சிகளின் கசிவிற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட ஏஜென்சி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சிறையில் அமைச்சருக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி" - அதிர்ச்சித்தகவல்!