தேர்தலில் வெற்றிபெறும் அமைச்சர்கள், பதவியேற்பு விழாக்களுக்கு ஹெலிகாப்டரில் வருவதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆனால் மகாராஷ்டிராவில் கிராம தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்ட ஜலிந்தர் நாக்ரே, பதவியேற்பு விழாவிற்கு ஹெலிகாப்டரில் வந்ததுதான் மாநிலம் முழுவதும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
ஜலிந்தர் நாக்ரே, அஹ்மத்நகரில் அம்பிடுமாலா கிராமத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் புனேவில் தொழிலதிபராக உள்ளார். இருப்பினும், சொந்த ஊர் மீது அதிகப் பிரியம் கொண்ட ஜலிந்தர் அவ்வப்போது தன்னால் முடிந்த உதவியினை மக்களுக்கு செய்து வந்தார். இதனால், அவருக்கு ஊரில் செல்வாக்கு அதிகரித்தது.
இந்நிலையில், கிராமத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அவர் தேர்தலில் களமிறங்கி வெற்றிகண்டுள்ளார். தற்போது, அவர்தான் மாநிலத்தின் மிகவும் பணக்காரரான கிராம தலைவர் ஆவார். ஹெலிகாப்டரில் வந்திறங்கிய நாக்ரேவுக்கு பூக்கள் தூவியும், பட்டாசு வெடித்தும் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். பதவியேற்பு விழாவுக்கு முன்பு, அவர் ரோக்தேஷ்வர், பலேஸ்வர், கண்டோபா கோயில்களுக்குச் சென்று பூஜை செய்தார். நன்கு படித்த நபர் கிராம தலைவராக வலம்வருவதால், கிராமத்தின் வளர்ச்சி நிச்சயம் அடுத்தகட்டத்திற்குச் செல்லும் என அப்பகுதிவாசிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: இறந்ததாகக் கருதப்பட்ட நபர் இறுதிச்சடங்குக்கு வந்ததால் பரபரப்பு