புதுச்சேரி: சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு எழுந்தருளி இருக்கும் புதுச்சேரி மாநிலம் திருநள்ளாற்றில், வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக, சனிபெயர்ச்சி என்றாலே மக்கள் மனதில் ஒரு அதீத அச்சம் உருவாவது இயல்பே. ஏனெனில், சனிப்பெயர்ச்சியின்போது அனைத்து ராசிகளுக்கும் சாதகமான சூழல் ஏற்படுவதில்லை.
சில ராசிகளுக்கு நல்லதும், சில ராசிகளுக்கு சாதகமற்ற சூழலும் நிகழும். எனவேதான் சனி கிரகத்தின் நகர்வுகளை அனைவருமே உற்று நோக்குவர். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியின்போது எந்தெந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட காலம் என்பதையும், அதற்கான பரிகாரங்களையும், காரைக்கால் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் குருக்களான சிவாச்சாரியாரை அணுகி கேட்டறிந்தோம்.
அப்போது அவர் கூறுகையில், “இந்த இடப்பெயர்சியில் மேஷம், மிதுனம், தனுசு, கன்னி உள்ளிட்ட ராசிக்காரர்கள் சனீஸ்வர பகவானால் நல்ல பலன்களைப் பெறுவர். ஆனால் மகர ராசி, கும்ப ராசி, மீன ராசிக்காரர்களுக்கு இது ஏழரைக் காலமாகும்.
கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி, சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டக சனி, விருச்சக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி, ரிஷப ராசிக்கு ஜீவன சனி, துலாம் ராசிக்காரர்களுக்கு பஞ்சம சனி உள்ளிட்ட காலமாகும். இந்த ராசிக்காரர்கள் திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு உரிய பூஜைகள் செய்து வழிபட்டால் நற்பண்புகளைப் பெற முடியும். அதனடிப்படையில்,
சனி பகவானுக்கு உகந்த பரிகார விரதங்கள்:
1. பிரதி சனிக்கிழமைதோறும் பூரண உபவாசம் இருந்து காகத்திற்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம்.
2. பிரதி சனிக்கிழமைதோறும் ஒருவேளை உணவோடு விரதம் இருந்து, சனி பகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.
3. சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி, தினசரி இரவு படுக்கும்போது அதை தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம்.
4. ஒரு தேங்காயை சனி பகவான் கோயிலில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள்ளு முடிச்சிட்டு, தீபமாக ஏற்றலாம் அல்லது திலதீபம் ஏற்றி வழிபடலாம்.
5. சனி பகவானுக்கு நல்லெண்ணெய், பால், தயிர் அபிஷேகம் செய்து, கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள்ளு சாதம், வடை மாலை சாத்தி வழிபாடாற்றி, அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
6. சனி பகவானுக்கு நவகிரக சாந்தி ஹோமங்கள் செய்து, அபிஷேக ஆராதனைகளும் சிறப்போடு செய்து, தொடர்ந்து மண்டல பூஜை செய்து பயன் பெறலாம்.
7. எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம், ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து, திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும், சனி பகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.
8. ஆஞ்சநேயர், தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.
9. அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனி பகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரம் அன்றைக்கோ, ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களைத் தரும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி எப்போது? - தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் பெயர்ச்சி விழா குறித்த தகவல்