புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நகராட்சி ஊழியர் சுரேஷ். இவரது வீட்டில் சாமி சிலைகள் இருப்பதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கதிரவன் தலைமையிலான காவல்துறையினர் சுரேஷ் வீட்டில் சாமி சிலைகள் உள்ளதா? என்பதை பரிசோதனை செய்வதற்கான அனுமதி பெற்று புதுச்சேரி வந்தனர்.
அதன்படி சுரேஷ் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் சுமார் 3 அடி உயர நடராஜர், அம்மன் சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சுரேஷ் வீட்டார் அந்த சிலைகள் பித்தளை என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த சிலைகளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கவும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இதுபற்றி தகவல் அறிந்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்தனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அந்த சிலைகளை பறிமுதல் செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின் அவைகளை தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரியில் சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுரேஷ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு நடராஜர், அம்மன் சிலைகள் கிடைத்தன.
இந்த சிலைகள் சுமார் 3 அடி உயரமும், தலா 40 கிலோ எடையும் கொண்டவை. இந்த சிலைகள் பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும். பரிசோதனை முடிவில் அந்த சிலைகள் ஐம்பொன் சிலைகளா? அல்லது பித்தளை சிலைளா? என்பது தெரியவரும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் பூதேவி உலோக சாமி சிலை மீட்பு: இருவர் கைது